தூத்துக்குடி,
தமிழக அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று மாலையில் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆலையின் முன்பு குவிந்தனர்.
ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட உடன் அவர்கள் தைத்தட்டியும், கைகளை உயர்த்தியும் கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் கூறியதாவது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் ஒன்றிணைந்து போராடியதால் கிடைக்க வெற்றி. துக்கத்திலும் சந்தோஷமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்த அரசுக்கும், மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் ஒன்றுமையுடன் போராடியதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த நக்கீரன் என்பவர் கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் அரசு அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. தற்போது, 100 நாட்கள் மக்கள் போராட்டம் நடத்திய போதும் அரசு கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து 13 பேரின் உயிர்களை இழந்தும், பலர் ரத்தம் சிந்தியும் உள்ளனர். இப்படி கஷ்டப்பட்டு தான் இந்த உத்தரவை பெற்றுள்ளோம். இது திருப்தி அளிக்கிறது. இதே நேரத்தில் வேதாந்தா அதிபர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் புகுந்து ஆலையை இயக்க முயற்சி செய்வார். இதனால் மாநில அரசு தக்க நடவடிக்கைகளை தற்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பண்டாரம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. இது மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. 13 உயிர்களை இழந்து இருக்கிறோம். அரசு மேற்கொண்ட நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அதுவரை போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
மடத்தூரைச் சேர்ந்த பொன்பாண்டி கூறும்போது ஆலை மூடப்பட்டு இருப்பது கிராமமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அரசு கண்டுகொள்ளவில்லை. 13 உயிர்கள் போன பிறகு தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் உள்ளது. அதே நேரத்தில் ஆலை நிர்வாகத்தினர் ஆலையை இயக்குவதற்காக வழக்கு தொடர்ந்தால் அதை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் கூறினார்.