மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைப்பவர்களுக்கு சித்தராமையா எச்சரிக்கை

“கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” என்று சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரத் மடிவாளா என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து அங்கு மதக்கலவரம் உண்டாகி ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை ஒடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கலவரக்காரர்களை கண்டதும் சுடும்படி போலீஸ் ஜ.ஜி. ஹரிசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்த ராமையா தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், சட்டம்-ஒழுங்கு எப்போதும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி வீழ்ச்சி அடைவதுடன், சமூகத்தில் பிரச்சினைகளும் ஏற்படும். மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் பணியை போலீஸ் அதிகாரிகள் மிக நேர்மையாக செய்ய வேண்டும்.

அதிகாரிகள் அலட்சியமாகவும், பொறுப்பு இல்லாமலும் இருக்கக்கூடாது. தவறுகள் நடப்பதை தடுக்க வேண்டும். எத்தகைய சம்பவங்களையும் தீவிரமாக கருதி செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால் ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படும். மேலும் அதுபோன்ற சம்பவங்கள் தேசிய அளவில் பெரிய செய்தியாக மாறிவிடும்.

நீங்கள் நேர்மையாக பணியாற்ற தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. முந்தைய அரசுகள் இதுபோன்று அதிகளவில் வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம் ஆகும். 12 ஆயிரம் போலீசாருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம், போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி, ஆரோக்கிய வசதி, குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்குவது, பல்வேறு படிகளை உயர்த்தி இருப்பது போன்ற பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

போலீஸ் துறையில் வசதிகளுக்கு எந்தவித குறைபாடும் இருக்கக்கூடாது. நேர்மைக்குறைவாக பணியாற்ற போலீசாருக்கான வசதிக்குறைபாடுகள் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதை மனதில் நிறுத்தி, பெரும்பாலான வசதிகளை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். அதனால் உங்களிடம் இருந்து அரசு அதிகளவில் நேர்மையான பணியை எதிர்பார்க்கிறது.

மக்களுடன் தோழமை, நல்லிணக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும். குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே சிறந்தது ஆகும். பெங்களூரு உள்பட மாநிலத்தின் பிற நகரங்களில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூத்த போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி போலீஸ் நிலையங்களுக்கு சென்று, குற்றங்களை தடுப்பதில் தங்களுக்கு உள்ள அனுபவத்தை காவலர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது தேர்தல் ஆண்டு. மதவாத சக்திகள் சமுதாயத்தில் அமைதியை குலைக்க முயற்சி செய்கின்றன. கலவரங்கள் நடைபெறும்போது அரசியல் கட்சிகள் அதை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன.

மத உணர்வுகளை தூண்டிவிடும் எந்த அமைப்புகளுக்கும் அரசு ஆதரவு அளிக்காது. மங்களூருவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் டி.ஜி.பி. உள்பட உயர் அதிகாரிகள் உடனே மங்களூருவுக்கு சென்று அங்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டும். கலவரத்திற்கு காரணமான பிரச்சினைக்கு தீர்வு காண நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

கர்நாடகம் ஆரம்பத்தில் இருந்தே அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மாநிலம் ஆகும். சமுதாயத்தில் அமைதியை குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் எவ்வளவு செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் சரி பாரபட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வரை போலீஸ் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். அமைதியை சீர்குலைப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

ஒருவேளை அதிகாரிகள் தவறு செய்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மனிதனின் உயிர் மிக முக்கியமானது. அந்த உயிர் அரசியலுக்காக பலியாவதை அனுமதிக்க கூடாது. உயர் போலீஸ் அதிகாரிகள் ஒரு பதவியில் 2 ஆண்டுகள் வரை பணியாற்ற அனுமதிக்கப்படும். இதற்காக பணி இடமாற்ற கொள்கை வகுக்கப்படும்.

இதற்கு போலீஸ் துறை ஒரு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அடிமட்டத்தில் பணியாற்றும் போலீசாரின் இன்ப-துன்பங்களை உயர் போலீஸ் அதிகாரிகளாகிய நீங்கள் விசாரிக்க வேண்டியது உங்களின் கடமை. தினமும் அணிவகுப்பு பணி முடிந்ததும் அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு