பெங்களூரு: பெங்களூருவில் வீட்டு உள் அலங்கார பொருட்கள் தருவதாக கூறி, பெண் என்ஜினீயரிடம் ரூ.23 லட்சம் பெற்று மோசடி செய்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெண் என்ஜினீயர்
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் 34 வயது பெண் வசித்து வருகிறார். அவர், என்ஜினீயர் ஆவார். அந்த பெண் தன்னுடைய வீட்டுக்கு உள் அலங்காரம் செய்ய விரும்பினார். இதற்கான ஆன்லைன் மூலமாக அந்த பொருட்களை வாங்குவதற்கு அவர் திட்டமிட்டார். இதுதொடர்பாக இணையதளத்தில் அந்த பெண் தேடிய போது, உள் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் செல்போன் எண் கிடைத்தது.
அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தன்னுடைய வீட்டுக்கு தேவையான உள் அலங்கார பொருட்கள வேண்டும் என்று அந்த பெண் கூறினார். பின்னர் சுதீப் மற்றும் கணேஷ் எனக்கூறி கொண்டு 2 பேர், அந்த பெண்ணிடம் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தனர். அப்போது அந்த பெண் கேட்ட அனைத்து அலங்கார பொருட்களையும், 2 பேரும் வீட்டுக்கே அனுப்பி வைப்பதாக தெரிவித்திருந்தனர்.
ரூ.23 லட்சம் மோசடி
இதற்காக ரூ.23 லட்சத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அப்பெண்ணிடம், 2 நபர்களும் கூறினார்கள். அவர்கள் கூறியபடி ரூ.23 லட்சத்தையும் அந்த பெண் அனுப்பி வைத்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் தனது வீட்டுக்கு உள் அலங்கார பொருட்கள் வராததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதீப், கணேசின் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அந்த 2 நபர்களும், உள் அலங்கார பொருட்கள் விற்கும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, பெண் என்ஜினீயரிடம் ரூ.23 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.