பெங்களூரு: பெங்களூரு தொழில் அதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக, போலி சி.பி.ஐ. அதிகாரி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
விசாரணையில் இருந்து...
பெங்களூரு பிரிகேட் ரோட்டை சேர்ந்தவர் பீட்டர் கேட்டி (வயது 66). தொழில் அதிபர். இந்த நிலையில் சாந்திநகரில் உள்ள எல்லம்மா தாசப்பா கல்வி நிறுவனத்தின் சொத்துகளை சீனிவாஸ் என்பவரிடம் இருந்து பீட்டர் வாங்க முயன்றதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் பீட்டர் உள்ளிட்ட சிலர் டெல்லிக்கு விசாரணைக்கு வரும்படி பீட்டருக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி இருந்தனர். ஆனால் தனது வயதை காரணம் காட்டி டெல்லிக்கு விசாரணைக்கு வருவதில் இருந்து பீட்டர் விலக்கு வாங்கி இருந்தார்.
இந்த நிலையில் பீட்டருக்கு சபாரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சபாரியா தனக்கு சி.பி.ஐ.யில் பணியாற்றும் அதிகாரிகளை தெரியும் என்றும், சி.பி.ஐ. விசாரணையில் இருந்து காப்பாற்றுவதாகவும் பீட்டரிடம் கூறினார். இந்த நிலையில் பீட்டருக்கு, சபாரியா 2 பேரை அறிமுகம் செய்து வைத்தார். அதில் ஷியாம் சந்திரசேகர் பாகலி என்பவரை சி.பி.ஐ. அதிகாரி என்றும், விவேக் யாதவ் என்பவரை சி.பி.ஐ. ஊழியர் என்றும் கூறி இருந்தார். பின்னர் பீட்டரை வழக்கு விசாரணையில் இருந்து காப்பாற்றுவதற்காக 3 பேரும் சேர்ந்து ரூ.70 லட்சம் வாங்கி இருந்தனர்.
3 பேர் மீது வழக்கு
ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் இருந்து பீட்டரை காப்பாற்ற 3 பேரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே பெங்களூருவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் பீட்டர் விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து தன்னை காப்பாற்ற வாங்கிய ரூ.70 லட்சத்தை தரும்படி சபாரியா, ஷியாம், விவேக்கிடம், பீட்டர் கேட்டார். ஆனால் 3 பேரும் பணம் கொடுக்க மறுத்தனர். மேலும் ஷியாம் போலி சி.பி.ஐ. அதிகாரி என்றும் பீட்டருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து பீட்டர், அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி, பீட்டர் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கோர்ட்டு, அசோக்நகர் போலீசாருக்கு அனுப்பி வைத்ததுடன் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் 3 பேர் மீதும் அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.