மரணம்
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.பி. சாவந்த். 91 வயதான இவர் நேற்று காலை 9.30 மணியளவில் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள வீட்டில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அவரது இறுதி சடங்கு இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது.
பி.பி. சாவந்த் கடந்த 1930-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி பிறந்தவர். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தா. பின்னர் மும்பை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக இருந்தார். 1973-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1989-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இவர், 1995-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.
மந்திரிகள்
2003-ம் ஆண்டு இவரது தலைமையிலான கமிஷன் அப்போதைய மராட்டிய மந்திரிகள் நவாப் மாலிக், சுரேஷ் ஜெயின், பத்மாசிங் பாட்டீல், விஜய்குமார் காவித் ஆகியோர் மீதான ஊழல் புகாரை விசாரித்து, அதில் அவர்கள் குற்றவாளிகள் என அறிக்கை தாக்கல் செய்தது. இதன்காரணமாக நவாப் மாலிக், சுரேஷ் ஜெயின் ஆகியோர் தங்களது மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர். பி.பி. சாவந்த் 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை சம்பவத்தின் உண்மையை கண்டறியும் குழுவில் இடம் பெற்றவர் ஆவார். மேலும் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவராகவும் இருந்து உள்ளார்.
2017-ம் ஆண்டு புனேயில் நடந்த சர்ச்சைக்குரிய எல்கர் பரிஷத் மாநாட்டின் துணை அமைப்பாளராகவும் இருந்தார்.மறைந்த முன்னாள் நீதிபதி சாவந்திற்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.