திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் மாசித்திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடு நடைமுறைகளின் படி இந்த ஆண்டு மாசித்திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி திருவிழா நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் அனுமதி உண்டு. அம்மனின் அனைத்து வீதிஉலாவும் ரத்து செய்யப்பட்டு, கோவில் பிரகாரத்தில் அம்மன் உலாவருதல் நடைபெறும்.
அதேபோல் காலை 9 மணி வரை பாலக்கொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றலாம். அக்னிசட்டி, மாவிளக்கு, முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி இல்லை. பூக்குழி இறங்குதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பூச்சொரிதல் அன்று அலங்கரிக்கப்பட்ட அம்மனின் பூத்தேர் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். காணிக்கை பூக்கள் பெறப்படும். தசாவதாரத்தன்று 3 அலங்காரங்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் நாள்தோறும் காலை 6 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நுழைவாயில் மூடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.