திருவண்ணாமலை,
பெங்களூரு பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரம் 4 லாரிகளில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை சீல் வைத்து மூடப்பட்டு இருந்தது.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, தேர்தல் தாசில்தார் முருகன், துணை தாசில்தார்கள் துரைராஜ், வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், போலீசார் முன்னிலையில் அறை திறக்கப்பட்டது. பின்னர் லாரியில் இருந்த சீலும் அவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியில் இரும்பு பெட்டியில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறந்து பார்வையிட்டார்.
இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த இரும்பு பெட்டிகள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் வைப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அனைத்து இரும்பு பெட்டிகளும் வைக்கப்பட்ட பிறகு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் தாசில்தார் கூறுகையில், பெங்களூருவில் இருந்து 588 இரும்பு பெட்டிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன. ஒரு இரும்பு பெட்டிக்கு 10 எந்திரங்கள் வீதம் 5 ஆயிரத்து 880 எந்திரங்கள் வந்துள்ளன என்றார்.