கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே உள்ள ஒட்டணை கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 55). இவர், மயிலாடும்பாறை அருகே ரெங்கராஜ் என்பவரின் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை ரெங்கசாமி வழக்கம் போல தோட்டத்துக்கு சென்றார்.
மதியம் அவர் சாப்பிட வீட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் ரெங்கசாமி வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அவருடைய மனைவி செல்வி, ரெங்கசாமி செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
மாலை வரை ரெங்கசாமியை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த செல்வி, கணவரை தேடி தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்துக்கு செல்லும் வழயில் கழுத்து மற்றும் முகம் ஆகியவற்றில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ரெங்கசாமி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஆண்டிப்பட்டி துணை சூப்பிரண்டு குலாம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்பது தெரியவில்லை. இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்ட காவலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடும்பாறை அருகே மூலக்கடை கிராமத்தில் வீட்டின் வாசலில் தூங்கிகொண்டிருந்த விவசாயி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பந்தமாக இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது தோட்ட காவலாளி கொலை நடந்துள்ளது.
இந்த மாதத்தில் மயிலாடும்பாறை பகுதியில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.