பிராட்வே,
சென்னை சவுகார்பேட்டை வாட்டர் பேசின் சாலையை சேர்ந்தவர் சந்தோஷ் மாஜி (வயது 41). இவர், அதே பகுதியில் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் சந்தோஷ் மாஜி பட்டறையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், தான் வெளிநாட்டில் இருந்து 481 கிராம் எடையுள்ள 2 தங்க கம்பிகள் வாங்கி வந்ததாக கூறி அந்த கம்பிகளை காண்பித்தார். இந்த கம்பிகளை வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக நகைகள் தரும்படி கேட்டார்.
தங்க கம்பிகள் என நம்பி அதை பெற்றுக்கொண்ட சந்தோஷ் மாஜி, அதற்கு பதிலாக 329 கிராம் எடைக்கொண்ட 10 தங்கச்சங்கிலியை அந்த நபரிடம் வழங்கினார். பின்னர் அந்த கம்பிகளை ஊழியர்களிடம் கொடுத்து உருக்கி நகைகள் செய்யுமாறு அவர் கூறினார். ஊழியர்கள் அந்த கம்பியை பரிசோதித்தபோது, அவை செம்பு கம்பிகள் என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் மாஜி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து யானைகவுனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 லட்சம் நகைகள் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.