விழுப்புரம்,
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு ஊழியர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 64 அரசு ஊழியர் சங்கத்தினரும், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுகவலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட 12 ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 437 ஆசிரியர்களில் 11 ஆயிரத்து 435 ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். 2 ஆயிரத்து 748 பேர் பணிக்கு வரவில்லை. 1,254 பேர் முறையாக விடுப்பில் உள்ளனர். இதனால் பகுதிநேர ஆசிரியர்கள், கற்கும் பாரத மைய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்களை தற்காலிகமாக பள்ளிகளில் பணியமர்த்தி அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல் அரசு ஊழியர் சங்கத்தில் 64 சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதால் ஒரு சில அரசு அலுவலகங்களில் மட்டுமே ஊழியர்கள் வருகை குறைவாக இருந்தது.
இதற்கிடையே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ரத்தினம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேசிங்கு, வணிக வரித்துறை பணியாளர் சங்க வட்ட செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், சுகாதாரத்துறை நிர்வாக பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் செல்லையா, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சண்முகசாமி, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்களுடன் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினரும் மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 250 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 115 பேரும், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்டார தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 240 பேரும், வானூர் தாலுகா அலுவலகம் முன்பு ஜெயவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 55 பேரும்,
மேல்மலையனூர் தாலுகா அலுவலகம் முன்பு திருநாவுக்கரசு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 135 பேரும், சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தங்கராசு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரும், திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பு ரமேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 170 பேரும், சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 82 பேரும், உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு சவரிமுத்து தலைமையில் மறியலில் ஈடுபட்ட 68 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 9 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,215 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் திண்டிவனம் காந்தி சிலை முன்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமையிலும், மரக்காணம் தாலுகா அலுவலகம் முன்பு காளிதாஸ் தலைமையிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.