கரூர்,
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. இதில் அரசு பொருட்காட்சியினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார், மாவட்ட கலெக்டர் அன்பழகன் வரவேற்று பேசினார். கீதா எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார்
இந்த விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் 2-வது முறையாக இந்த பொருட்காட்சி நடத்தப்படுகிறது. 27 அரசுத்துறைகளின் அரங்குகளுடன் உள்ள இந்த பொருட்காட்சியில், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு விளையாட்டுகளும் உள்ளது. அரசின் சார்பில் தீட்டப்படுகின்ற திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த அரசு பொருட்காட்சி அமைந்துள்ளது. இதனை அனைவரும் வந்து கண்டுகளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், கரூரில் டெக்ஸ்டைல், கொசுவலை, பஸ்பாடி உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருப்பதால் வெளியிடங்களில் இருந்தும் பலர் இங்கு வேலைக்கு வருகின்றனர். ஆனால் பொழுது போக்கு இல்லாதது குறையாக இருந்தது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த அரசு பொருட்காட்சி திகழும். மேலும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்க ரூ.490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்தநிலையில் நெரூர், குளித்தலையில் கதவணைகள் அமைக்க ரூ.50 லட்சம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கதவணைகள் மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் பிரச்சினைக்கு முழுவதுமாக தீர்வு காண ஏற்பாடுகள் நடக்கிறது என்றார்.
முன்னதாக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 192 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 75 லட்சத்து 10 ஆயிரத்து 720 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து செய்திமக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்டவை சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் சந்தியா, லியாகத், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் செந்தில்குமார், ராஜாமணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், மாற்றுத்திறனாளி நல அதிகாரி ஜான்சி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் நன்றி கூறினார்.