பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டு நவீன வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர்.
88 படுக்கை வசதிகளுடன்கூடிய இந்த ஆஸ்பத்திரியில், தாய் சேய் நலப் பிரிவு, கண் சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவு, சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, முதல்அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம், பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவு, சித்த மருத்துவ பிரிவு ஆகியவற்றில் உள் மற்றும் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தாலுகாவில் வாகன விபத்து, தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஏற்படும் விபத்தும், இன்னும் பிற வகை உயிரிழப்பு சம்பவங்களுக்கு ஆஸ்பத்திரியில் ஏற்படும் உயிரிழப்புகளும் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதும் நடைபெற்று வருகிறது.
இந்த உடல்கள் பரிசோதனை செய்த பின்பு உயிரிழந்தவரின் சொந்த கிராமங்களுக்கு உடல்களை எடுத்து செல்ல அரசு ஆஸ்பத்திரியில் அமரர் ஊர்தி இல்லாமல் உள்ளது.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
ஏழை, எளியோர் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல தனியார் அமரர் ஊர்திக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றது.
பொதுமக்களின் ஏழ்மை நிலையை கருதியும் அமரர் ஊர்தி இல்லாத நிலையை மாற்றி அரசு ஆஸ்பத்திரியின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும்.
இலவச அமரர் ஊர்தி சேவையை தொடங்க தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.