மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பொதுமக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடைகள் திறக்கப்பட்டன

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க நேற்று முன்தினம் இரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்த உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை கடைகள் திறக்கப்பட்டன.

மக்கள் கூட்டம்

இந்த கடைகளில் வழக் கத்தைகாட்டிலும் பொருட்கள் வாங்குவதற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டமாக கூடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தும் யாரும் பொருட்படுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.

நாராயணசாமி ஆலோசனை

இந்தநிலையில் அவர் புதுவை நிலவரம் குறித்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கலெக்டர் அருண் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமியை வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன், வணிகர்களின் பேரமைப்பு மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வேறு மருத்துவம் இல்லை

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். நேற்று முன்தினம் நடந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை பொதுமக்கள் நல்லமுறையில் கடைபிடித்து பிற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்ந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணிமுதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்த வேண்டும். இதைவிட வேறு மருத்துவம் இல்லை.

அலட்சியம்

ஆனால் அதை மக்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். அவ்வாறு இருந்தால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும். நேற்று முன்தினம் ஒரே நாளில் 700 பேர் இறந்துள்ளனர். சீனாவில் ராணுவத்தைக்கொண்டு மக்களை கட்டுப்படுத்தி உள்ளனர். புதுவை மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை.

புதுவையிலும் மக்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த சில நடவடிக்கைகளை எடுக்கிறோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்.

ஊரடங்கு உத்தரவு

இதன்படி புதுவை மாநிலத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. (இந்த உத்தரவு நேற்று இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்தது).

இந்த உத்தரவின்படி பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டும். அவசியம் ஏற்பட்டால் தவிர எதற்காகவும் வெளியே வரக்கூடாது. இதன்படி மக்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள்.

தொழிற்சாலைகள் மூடல்

புதுவையில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். இதற்கு தொழில் நிறுவன அமைப்பினர் ஆதரவு தந்துள்ளனர்.

ஓட்டல்கள் திறந்து இருக்கலாம். ஆனால் அங்கு யாரும் அமர்ந்து சாப்பிடக்கூடாது. பார்சல் வாங்கி சென்றுவிட வேண்டும். தனியார் நிறுவனத்தினர் வீடுவீடாக சென்று உணவு சப்ளை செய்வது நிறுத்தப்படும்.

வெளிமாநிலத்தினர், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வெளிமாநில வாகனங்களுக்கும் அனுமதியில்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

துக்க நிகழ்ச்சிகள்

பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைக்கப்பட வேண்டும். அனாவசியமாக யாராவது வெளியில் சுற்றினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

வருகிற 31-ந்தேதி வரை திருமண நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும். துக்க நிகழ்ச்சிகள் இருந்தால் அதை 3 மணிநேரத்திற்குள் முடிக்கவேண்டும். வங்கிகள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படும்.

அத்தியாவசிய தேவை

உணவு பொருட்கள், பால் பூத்துகள், பழக்கடைகள், பெட்ரோல் பங்குகள், கியாஸ் நிறுவனங்கள் செயல்படும். அத்தியாவசிய தேவைக்கு ஒரு சில உள்ளூர் பஸ்கள் இயக்கப்படும். இவை தவிர அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்படும்.

கால்நடைகளுக்கான தீவனங்களை கொண்டு வரும் வாகனங்கள் வரலாம். பெண்கள் குழந்தைப்பேறுக்காக ஆஸ்பத்திரிக்கு வரலாம்.

மதுபான கடைகள்

ஏற்கனவே மதுபார்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு காரணமாக கள், சாராயக்கடைகள், மதுபான கடைகள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு