மாவட்ட செய்திகள்

பாணாவரம் பகுதியில் சுற்றித்திரிந்த பெங்களூரு வாலிபர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பாணாவரம் பகுதியில் சுற்றித்திரிந்த பெங்களூரு வாலிபர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பனப்பாக்கம்,

குழந்தை கடத்தல் வதந்தி காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் போளூர் அருகே பொதுமக்கள் தாக்கியதில் ருக்மணி என்ற பெண் இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து சந்தேகப்படும்படி யாராவது சுற்றித்திரிந்தால் அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் பாணாவரம் பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்தார். அந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் விசாரித்தனர். அவர், கன்னட மொழியில் பேசி உள்ளார். இதுபற்றி பொதுமக்கள், பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் காமராஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வாலிபரை பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலும் விசாரித்துள்ளனர். அப்போதும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் 5 செல்போன் எண்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

அதில் ஒரு செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். எதிர்முனையில் பேசியவர், எனது பெயர் ஏகாம்பரம். நான் பெங்களூருவில் வசிக்கிறேன் எனக் கூறினார். அவரிடம் போலீசார், பாணாவரம் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் நாங்கள் எங்கள் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினோம். அவர் தான் உங்களின் செல்போன் எண்ணை கொடுத்தார். வாலிபரின் அங்க அடையாளங்களை கேட்டு விசாரித்த ஏகாம்பரம், தாங்கள் பிடித்து வைத்துள்ள நபர் என்னுடைய மகன் முருகன் (வயது 28) எனத் தெரிவித்துள்ளார்.

எனது மகன் முருகன் பெங்களூருவில் கட்டிட வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி சைத்ரா (25). அவர்களுக்கு நித்தீஷ் என்ற 1 வயது மகனும், 6 நாட்களுக்கு முன்பு பிறந்த ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பெண் குழந்தை பிறந்ததும் முருகன் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக திருப்பதி சென்றார். அங்கிருந்து திரும்பி ரெயிலில் பெங்களூரு வரும்போது, தூக்கக் கலக்கத்தில் இருந்த முருகன் நடுவழியில் ஓரிடத்தில் ரெயில் நின்றபோது இறங்கி இருக்கலாம். வழிதவறி சென்ற அவர், பாணாவரம் பகுதியில் சுற்றித்திரிந்திருக்கலாம் என ஏகாம்பரம், செல்போனிலேயே போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏகாம்பரம் கூறுகையில், எங்களுடைய சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிளாம்பாடி கிராமம் ஆகும். நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி பெங்களூரு வந்து விட்டோம். எங்களின் உறவினர்களை நான் பாணாவரம் போலீசுக்கு அனுப்பி வைக்கிறேன். தாங்கள், எங்களின் உறவினர்களிடம் முருகனை ஒப்படைத்து விடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு ஏகாம்பரத்தின் உறவினர்கள் வந்தனர். அவர்களிடம் போலீசார் தீரவிசாரித்து முருகனை ஒப்படைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்