பெங்களூரு,
கர்நாடகத்தில் அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் தென்மேற்கு பருவமழையானது மைசூரு, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. குடகு மாவட்டமானது மழைநீரில் தத்தளித்தது. இதனால் குடகு மாவட்ட மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை முடியும் தருவாயில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் கொட்டித்தீர்த்தது. இரவு 11 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழையானது நேற்று காலை 8 மணி வரை பெய்தது. இடைஇடையே சிறிது நேரம் மழை நின்றாலும் கூட அவ்வப்போது பெங்களூரு நகரின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்த கனமழையின் காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தன. கொட்டிகெரே, உளிமாவு மெயின்ரோடு, அஷ்ரமா மெயின் ரோடு, பன்னரகட்டா ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தன. இதனால் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.
பி.டி.எம். 6-வது ஸ்டேஜ், வசந்தபுரா, வஜ்ராஹள்ளி, கனகபுரா ரோடு, அனுகிரகா லே-அவுட், ஒசகெரேஹள்ளியில் உள்ள தத்தாத்ரேயா கோவில் ரோடு, இட்டமடுவில் உள்ள பாலாஜி நகர், பத்மநாபநகரில் கும்மையா லே-அவுட், ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மந்திரா ரோடு உள்பட பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அவர்கள் நேற்று காலையில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்த மழைநீர் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன.