விழுப்புரம்,
17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து 7 கட்டங்களாக ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தொடங்கி கடந்த 19-ந்தேதி வரையில் நாடுமுழுவதும் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் கடந்த 23-ந்தேதி வெளியாயின. இதையடுத்து 2 மாதங்களுக்கு மேலாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் தளர்வு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள், குறைகேட்பு கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள் தொடங்கியது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் என்று அனைத்து வகையான கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.
நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு செய்யப்பட்டதால் வழக்கம் போல், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் முதியோர் உதவித்தொகை, அரசு இலவச வீட்டுமனை, அரசு தொகுப்புவீடுகள், பட்டாமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் குவிந்தன. இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 261 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி குறைகேட்பு கூட்டம் நடந்த நிலையில், அதன் பின்னர் தற்போது தான் கூட்டம் நடந்துள்ளது. இதனால் கோரிக்கை மனுக்களை அளிக்க ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்து இருந்தனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் அம்புரோஸியா நேவிஸ்மேரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கருணாநிதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, உதவி ஆணையார் திருஞானம், உதவி இயக்குனர்கள் சீனிவாசன், ரத்தினமாலா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) மோகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.