கோவை,
இந்து முன்னணியின் கோவை மாநகர அமைப்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த முபாரக் (வயது 35), சதாம் உசேன் (27) சுபேர் (33), அபுதாகீர் (32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரை கைது செய்தனர்.
கைதான 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை கணபதியில் பெயிண்டரான ஹக்கீம் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க சசிகுமாரை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர்.குமார் தலைமையில் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக கோவையில் என்.ஐ.ஏ. அலுவலகமும் அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முபாரக், சதாம் உசேன், சுபேர் மற்றும் அபுதாகீர் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி, செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் முபாரக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஒரு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதும், கைதான 4 பேரும் தலைமறைவாக இருந்தபோது அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அமைப் பை சேர்ந்த சிலரை நேரில் வந்து ஆஜராகும்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். அதில் ஆஜரானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.