மாவட்ட செய்திகள்

ஊட்டியில் மழை காரணமாக மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

ஊட்டியில் மழை காரணமாக மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

ஊட்டி

ஊட்டியில் பலத்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகிறது. மேலும் மரம் விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊட்டி நகரில் இரவில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. அதேபோல் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இதனால் கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகமானது. மேலும் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை மற்றும் காற்று காரணமாக நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்துக்கு செல்லும் எட்டின்ஸ் சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

போக்குவரத்து பாதிப்பு

அந்த நேரத்தில் யாரும் சாலையில் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையோரத்தில் இருந்த மின்கம்பி மீது மரம் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் சுவரும் சேதமடைந்தது. இதனால் அரசு பஸ்கள் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர் போக்கு வரத்து சீரானது.

சாலையில் மண் அகற்றம்

ஊட்டி-கோத்தகிரி சாலை மேல் கோடப்பமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் மண் விழுந்து கிடந்தது. மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறியது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பொக்லைன் எந்திரம் சாலையில் கிடந்த மண் அகற்றப்பட்டது. மண்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு வசித்து வரும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

அதுபோன்று பந்தலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

வீடுகள் இடிந்தன

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக வீடுகள் இடிந்தன. கீழ்கோத்தகிரி அருகே உள்ள அம்மன் நகரைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மனைவி சரோஜா (வயது40). கூலித் தொழிலாளி.

தொடர்ந்து பெய்த மழையால் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதேபோல ஆதிவாசி கிராமமான கடினமாலா பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (54) வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் மாமரம் மேல்கூப்பு பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவி ருக்மணி ( 34) வீடும் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அத்துடன் பதிக்கப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ.4,100-ஐ கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் வழங்கினார்.

மழையளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஊட்டி-24, கிளன்மார்கன்-10, குந்தா-73, அவலாஞ்சி-55, எமரால்டு-33, கெத்தை-34, கிண்ணக்கொரை-33, அப்பர்பவானி-21, பாலகொலா-64, குன்னூர்-28.5, பர்லியார்-30, கேத்தி-21, உலிக்கல்-26, எடப்பள்ளி-37, கோத்தகிரி-29, கோடநாடு-42 உள்பட மொத்தம் 649.5 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 22.40 ஆகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்