அருமனை,
குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு நாகர்கோவில் அப்டா மார்க்கெட் முன்பு அவரது அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து, வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த சிலை அருகே உள்ள ஜெயலிலதா உருவ மணல் சிற்பத்திற்கு மலர் தூவினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் நான் கலந்துகொள்வதை தடுக்க சதி நடந்தது. அந்த சதிவேலையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஈடுபட்டு இருக்கிறார். ஆர்.கே.நகர் இடைதேர்தல் முடிவு வந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இல்லாமல் போய்விடும்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வீடியோ இருப்பதே தெரியாது என்று எல்லா அமைச்சர்களும் சொல்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில், இவ்வளவு பெரிய புயல் வந்ததே, முதல்-அமைச்சருக்கும், அமைச்சருக்கும் தெரியவில்லை. புயல் வந்த பின்பு, 14 நாட்கள் கழித்துதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டம் வந்திருக்கிறார். அப்படி இருக்க வீடியோ ஆதாரம் இருப்பது மட்டும் அமைச்சர்களுக்கு எப்படி தெரியும்.
இதையடுத்து அருமனை நோக்கி புறப்பட்ட அவருக்கு மேல்புறம், இடைகோடு, குழித்துறை, களியக்காவிளை உள்ளிட்ட பல ஊர்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அருமனையில், குலசேகரம் செல்லும் சாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சி அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது. தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, விஜயதரணி, வசந்தகுமார் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக அருமனையில் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அருமனையில் நடந்து வரும் கிறிஸ்துமஸ் விழாவில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டுள்ளார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில், நான் கலந்துகொள்வதால் பெருமை அடைகிறேன்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது எனக்கு தெரியாது. அவர், வீடியோவை வெளியிட்டுவிட்டுதான் என்னிடம் சொன்னார். மேலும், இந்த விஷயத்தை தானே சசிகலாவிடம் கூறிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, சமீபத்தில் சசிகலா பரோலில் வந்தபோதுதான் கொடுத்ததாக கிருஷ்ணபிரியா தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதில் எனக்கு, நூற்றுக்கு நூறு சதவீதம் உடன்பாடு கிடையாது. ஏனென்றால், இந்த வீடியோ மார்ச் மாதத்தில் இருந்தே இருக்கிறது. வீடியோவை கவனித்து பார்த்தால் அதில் இருக்கும் நேரம், தேதி உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளலாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் வெற்றிபெற வேண்டும் என்று சென்னை முதல் குமரி வரை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.