மாவட்ட செய்திகள்

அரசு தீவிர நடவடிக்கை எடுத்து இருந்தால், புயல் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு

அரசு தீவிர நடவடிக்கை எடுத்து இருந்தால் புயல் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்று தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கூறினார்.

தினத்தந்தி

தக்கலை,

குமரி மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில், கலைஞர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் தக்கலை அண்ணா கலையரங்கில் நடந்தது.

இதற்கு மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ரேவன்கில் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணி, மாவட்ட பிரதிநிதி முத்துகுமரேஷ், அவைத்தலைவர் பொன்.குமாரசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசும் போது கூறியதாவது:

கலைஞர் கருணாநிதி திரைத்துறையிலும், இலக்கிய துறையிலும் சாதனை படைத்ததுடன், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசியல் மூலமும் பாடுபட்டார். அவர் ஆட்சியில் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தமிழக வளர்ச்சி 10.14 சதவீதமாக இருந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அது 6.7 சதவீதமாக ஆனது.

கஜா புயல் குறித்து மண்டல ஆய்வு மையம் 6 நாட்கள் முன்பே அறிவித்தது. அதற்கேற்ப அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருந்தால் புயல் உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம்.

1996ல் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் காங்கிரசை எதிர்க்க வேண்டியது இருப்பதால், தமிழகத்தில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணியை விட்டு விலகி சென்றது. ஆனால் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், தி.மு.க.வுடன் தான் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார். இது தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாக திறமைக்கு ஒரு சான்று ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், மீனவர் அணி செயலாளர் இரா.பெர்னார்டு, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல.ஏ.க்கள் புஷ்பலீலா ஆல்பன், பெர்னார்டு குமரி கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் சி.என்.செல்வன், தக்கலை ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை