ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக க.சொ.க.கண்ணன் போட்டியிடுகிறார். ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் தேர்தல் பிரசாரத்தின்போது பேசியதாவது:-
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிமடம், தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வேலை வாய்ப்பினை உறுதி செய்வேன். மேலும் படித்து, முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதோடு மட்டுமின்றி, புதிதாக தொழில் தொடங்குவதற்கும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் தேவையான உதவிகளை செய்வேன்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொழில் நடத்தும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன். ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் நெசவாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தையல் கலைஞர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான அத்தியாவசிய, அடிப்படை தேவைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். கிராமங்கள் தோறும் சாலை வசதிகளை கணக்கெடுத்து புதிய தரமான தார் சாலை அமைத்து தருவேன். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து தருவதற்கு முயற்சி செய்வேன். தட்டுப்பாடு இல்லாத குடிநீரை உறுதி செய்து எந்நேரமும் பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்வதை உறுதிபடுத்துவேன்.
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், உடையார்பாளையம் ஆகிய பகுதிகளில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன். ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன். கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன். தா.பழூர் ஒன்றியத்தில் ஒன்றியக் குழுத் தலைவராக நான் பொறுப்பேற்ற காலத்தில் எனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் அரியலூர் மாவட்டத்தையும் தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் மதனத்தூர்- நீலத்தநல்லூர்
கொள்ளிடம் பாலம் அமைவதற்கு உறுதியாக இருந்தது போன்று, நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொள்ளிடத்தில் முக்கிய இடங்களில் கதவுடன் கூடிய தடுப்பணை அமைப்பதற்கும் உறுதியாக பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தில் தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.