மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏற்கனவே 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 3-ம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களும் மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் மராட்டியத்தில் மும்பை, புனே, பிம்ப்ரி சிஞ்ச்வாட், மாலேகாவ் ஆகிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது.
கலெக்டர்களுக்கு உத்தரவு
இதற்காக சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை வரையறுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு மராட்டிய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நகர்ப்புறங்களை பொறுத்தவரை கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எல்லையாக குடியிருப்பு காலனி, நகராட்சி வார்டு, நகராட்சி மண்டலம், போலீஸ் சரகம் என வரையறுக்கப்பட வேண்டும்.
கிராமப்புறங்களை பொறுத்தவரை தனி கிராமமாகவோ, கிராமங்களின் தொகுப்பாகவோ, கிராம பஞ்சாயத்தாகவோ, போலீஸ் நிலையங்களின் எல்லையாகவோ இருக்க வேண்டும்.
மும்பை, புனே
மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் நிர்வாக ரீதியான அணுகல் மற்றும் கட்டுப்பாட்டு திறனை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு மண்டலங்களை நியாயமாக வரையறுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
அவசர மருத்து சேவை, அத்தியாவசிய பொருட்கள் சேவை ஆகியவற்றை பராமரிப்பதை தவிர இந்த மண்டலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிபடுத்த அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலான நேரத்திலும் தனிநபர்கள் நடமாட்டம் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.
அத்தியாவசிய பணிகள்
மும்பை பெருநகரம், புனே, பிம்ப்ரி சிஞ்ச்வாட், மாலேகாவ் பகுதிகளை தவிர மற்ற இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள், ஐ.டி. மென்பொருள் உற்பத்தி ஆகிய அத்தியாவசிய பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனுமதிக்கப்படும்.
கிராமப்புறங்களில் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும்.
இதேபோல மும்பை, புனே மற்றும் மாலேகாவ் பிராந்தியங்களை தவிர மற்ற இடங்களில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்க முடியும்.
பசுமை மண்டலங்களில் பஸ்கள் இயக்கப்படும். மற்ற போக்குவரத்துகள் அங்கீகரிக்கப்பட்ட பாஸ் இல்லாமல் அனுமதிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் வரையறுக்கப்பட்ட பின்னர், ஊரடங்கில் மேற்கண்ட தளர்வுகளை செய்ய மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது.