பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்டார். அவருடன் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் இருந்தனர். முதலில் கே.ஆர்.புரத்தில் உள்ள குந்தலஹள்ளி கேட் அருகே நடைபெற்று வரும் சுரங்க பாதை பணிகளை எடியூரப்பா ஆய்வு செய்தார். அந்த சுரங்க பாதையின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு கடும் கோபம் அடைந்த எடியூரப்பா, என்ன காரணத்திற்காக அந்த பணிகளை நிறுத்தி வைத்துள்ளர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அந்த பணியின் ஒப்பந்ததாரர், நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்சினை உள்ளதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மந்திரி ஆர்.அசோக் மற்றும் அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ., அது காரணம் அல்ல, நீங்கள் துணை குத்தகைக்கு பணியை கொடுத்துள்ளர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம். அதனால் இந்த பணி நடைபெறவில்லை. யாரை கேட்டு துணை குத்தகைக்கு பணியை வழங்கி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
பெங்களூருவில் இன்று (அதாவது நேற்று) பல்வேறு பகுதிகளுக்கு சென்று, வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தேன். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். பொம்மசந்திரா-ஆர்.வி.ரோடு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து 2021-ம் ஆண்டுக்குள் மெட்ரோ சேவை தொடங்கப்படும்.