சென்னை,
செல்போனில் தொடர்பு கொண்டு இனிய குரலில் பெண்கள் பேசுவார்கள். உங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டால் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் ஒரே வாரத்தில் கடன் பெற்றுத்தரப்படும் என்று அந்த பெண்கள் இனிக்க இனிக்க பேசுவார்கள். அந்த பேச்சை உண்மை என்று நம்பி கடன் உதவி தேவைப்படுகிறது என்று சொன்னால், உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பி வைப்பார்கள்.
அந்த விண்ணப்ப மனுக்களை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்பியவுடன் நீங்கள் கேட்கும் கடன் தொகைக்கு ஏற்ப உங்கள் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய சொல்வார்கள். அடுத்த கட்டமாக உங்கள் ஆதார் எண்ணை கேட்பார்கள். இதை தொடர்ந்து வங்கி ஏ.டி.எம். கார்டின் ஓ.டி.பி. எனப்படும் ரகசிய குறியீட்டு எண்ணையும் கேட்பார்கள். ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்தவுடன் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தை ஆன்லைன் மூலமாக எடுத்து விடுவார்கள். ஆனால் உங்களுக்கு வங்கி கடனும் கிடைக்காது. கடன் கிடைக்கும் என்ற ஆசையில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்திய பணமும் பறிபோகிவிடும். இது போன்ற ஒரு மெகா மோசடியை பொதுமக்களை ஏமாற்றி சமீபகாலமாக சென்னையில் ஒரு கும்பல் அரங்கேற்றி வந்தது.
இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்த பொது மக்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்களை கொடுத்த வண்ணம் இருந்தனர். ஒரே வாரத்தில் 100 பேர் ரூ.25 லட்சம் வரை இழந்து மோசடி கும்பலிடம் மோசம் போய் விட்டதாக புகார் மனுக்களை கொடுத்தனர்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் நாக ஜோதி, உதவி கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் கந்தவேல், மீனாகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.