க.பரமத்தி,
தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்கும் என்று பேசிய அவர், கரூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றதும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்போகும் 100 திட்டங்களை தயாரித்துள்ளார். அதனை அவர் கலைஞர் அறிவாலயத்தில் வெளியிட்டு பேசினார்.அதன் விவரம் வருமாறு:-
கரூர் நகராட்சியை தரம் உயர்த்துதல், சுகாதாரம் மற்றும் குப்பை மேலாண்மை, குடிநீர், மருத்துவ வசதி, தொழில் வளர்ச்சி, கல்வி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மேம்பாடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன், மகளிர் மேம்பாடு, விளையாட்டு, வேலைவாய்ப்பு, சாலைகள், பாலங்கள் மற்றும் அணைகள், நீர்மேலாண்மை, விவசாயம் காப்போம், மாற்றுத்திறனாளிகள் நலன், பொது, சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் நலன் உள்பட 100 வாக்குறுதிகள் இடம்பெற்று உள்ளன.
பின்னர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:- வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் என்னை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று ஆதரவு தெரிவிக்கின்றனர். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கரூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றக்கூடிய 100 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு உள்ளேன். ஒரு வாக்குறுதிக்கு ஒரு மதிப்பெண் என்றால் 100 வாக்குறுதிக்கு 100 மதிப்பெண். இதன்மூலம் கரூர் தொகுதியில் வெற்றிபெற்று 5 ஆண்டுகளில் இந்த 100 வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன்.
இதில் முதல் திட்டமாக கரூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தெருவிளக்குகளும் 3 நாட்களில் சரிசெய்யப்படும். 100 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் வினியோகிக்கப்படும். அனைத்து தெருக்களிலும் தார்ச்சாலை, சிமெண்டு சாலை அமைத்து கொடுக்கப்படும். கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் திருப்பூருக்கு அடுத்தப்படியாக ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பஸ்பாடி என 3 பிரதான தொழில்களை கொண்டு ஏற்றுமதியில் தமிழகத்தில் 2-ம் இடத்தை கரூர் வகிக்கிறது. அந்த அளவிற்கு ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற கரூர் நகராட்சி வளர்ச்சி பெறவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்து அனைத்து வசதிகளையும், திட்டங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். எனவே இந்த சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதற்கு கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.