கரூர்,
கரூர் வட்டாரக்கிளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று கரூர் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் அருள்குழந்தை தேவதாஸ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வம் வரவேற்று பேசினார். வட்டார செயலாளர் பிரான்சிஸ் டேனியல்ராஜா கோரிக்கை விளக்கி பேசினார். இதில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வட்டார பொருளாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.