கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு சார்பில் ஒரு நாள் வரலாற்று களப்பயணம் மேற்கொண்டனர். இந்த களப்பயணத்தில் கிருஷ்ணகிரி ஒன்றியத்தை சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு ஒரு மாணவி, மாணவியின் தாயார், ஒரு ஆசிரியர் என 3 பேர் வீதம் மொத்தம் 60 பேர் சென்றனர். இந்த களப்பயணத்திற்கு அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
இதில் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நடுசாலை சிவன் கோவிலில் உள்ள 2-ம் ராஜேந்திரன், பிற்கால குலோத்துங்கன் காலம் வரையிலான கல்வெட்டுகள் குறித்தும், கல்வெட்டுகளில் என்ன என்ன வரிகள் வசூல் செய்யப்பட்டது. சின்னகொத்தூரில் குந்தாணி ராஜ்ஜிய பிற்கால சோழர்களின் ஒய்சால மன்னர்களின் ஆட்சிக் காலம் குறித்தும், அவர்கள் கையாண்ட போர்கள் குறித்தும், அங்கிருந்த ஆடல் அரங்கம் குறித்தும் காப்பாட்சியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் நிலையத்தை பார்வையிட்டு, அஞ்சல்கள் பிரிக்கும் விதம், பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகை திட்டம், விரைவு அஞ்சல், பண சேவை குறித்த கேட்டறிந்தனர். அரசு அருங்காட்சியகத்தை மாணவிகள் பார்வையிட்டனர்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் பிரபாகர், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோரை சந்தித்து தங்களது களப்பயணம் குறித்து மாணவிகள் கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்ச்சியின் போது வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கோதண்டபாணி, குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், செல்வகுமார், பிரகாஷ், மதிவாணன், காவேரி, ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.