மும்பை,
கடோல் சட்டசபை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆசிஸ் தேஷ்முக் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் காலியாக உள்ள அந்த சட்டசபை தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தநிலையில் நாக்பூர் ஐகோர்ட்டு அமர்வு முன்பு பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சட்டசபையின் ஆயுள்காலம் இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி பெறுபவர் 3 மாதங்கள் (ஜூன், ஜூலை, ஆகஸ்டு) மட்டுமே பதவியில் இருக்க முடியும். எனவே இந்த தேர்தலுக்கு வீண் செலவை தவிர்த்து சட்டசபை பொதுத்தேர்தலுடன் சேர்த்து அக்டோபரில் தேர்தலை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடோல் சட்டசபை தொகுதி இடைதேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பொதுநலன் மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.