மீஞ்சூர்,
மீஞ்சூர் ஒன்றியத்தில் கல்பாக்கம், நெய்தவாயல், வாயலூர், கொக்குமேடு, திருவெள்ளைவாயல், ஊரணம்பேடு, காட்டூர், தத்தைமஞ்சி, கடப்பாக்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலிருந்து முக்கிய ஊரான மீஞ்சூர் செல்வதற்கு மீஞ்சூர்-காட்டூர் நெடுஞ்சாலையை பயன்படுத்தி செல்லவேண்டும்.
இந்த சாலையின் வழியாக நாள்தோறும் இருசக்கர வாகனங்கள், அரசு பஸ்கள், லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்களில் பலர் பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் பொதுமக்கள் மீஞ்சூர் ரெயில்வே தண்டவாளம் வழியாக செல்ல மீஞ்சூர்-காட்டூர் நெடுஞ்சாலைக்கு ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும்.
சென்னை சென்டிரல்-மீஞ்சூர் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மின்சார ரெயில்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சென்று வருகின்றது. இதற்கிடையே மின்சார ரெயில்கள் அடிக்கடி செல்வதால், அப்போது மீஞ்சூர் ரெயில்வே கேட் மூடப்படுகிறது.
இதனால் மீஞ்சூர் காட்டூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் அவசர காலத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் அரசிடமும், தெற்கு ரெயில்வே அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டது.
எனவே மீஞ்சூரில் ரெயில்வே மேம்பாலம் கட்டி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்து ரூ.30 கோடி நிதி ஒதுக்கியது. அதேபோல் இந்த திட்டத்தில் ரெயில்வே துறையும் இணைந்து மேம்பாலத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் தொடக்கமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ரெயில்வே துறை சார்பில் மூன்று இடங்களில் 6 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டது.
இந்த மேம்பால கட்டுமானப்பணி ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில் திடீரென்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பதால், மீஞ்சூர்-காட்டூர் நெடுஞ்சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அரசும், ரெயில்வே துறையும் பொதுமக்களின் நலன் கருதி கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணிகளை தொடங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.