மாவட்ட செய்திகள்

நாலச்சோப்ராவில் சொத்துக்காக தாயை கழுத்தை அறுத்து கொன்ற மகன் கைது

நாலச்சோப்ராவில் சொத்துக்காக தாயை கழுத்தை அறுத்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை, உறவினரும் கைதானார்கள்.

வசாய்,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தையொட்டி கடந்த மாதம் 21-ந்தேதி பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், கொலையான பெண் நாலச்சோப்ரா கிழக்கு ஜதாசங்கர் சால் பகுதியில் வசித்து வந்த குசும் பிரஜாபதி(வயது38) என்பது தெரியவந்தது. அவரது கணவர் ராம்மிலன்(45) அவரை பிரிந்து வேறொரு பெண்ணுடன் வசித்து வருவது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் போலீசார் ராம்மிலனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, குசும் பிரஜாபதி கொலை வழக்கில் அவர் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. விசாரணையின் போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

ராம்மிலனின் மூத்த மனைவி உத்தரபிரதேசத்தில் வசித்து வருகிறார். நாலச்சோப்ராவில் அவர் குசும் பிரஜாபதியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகேஷ்(18) என்ற மகன் உள்பட 4 பிள்ளைகள் இருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் கணவர், மனைவி இருவரும் சேர்ந்து வசித்து வந்தபோது, குசும் பிரஜாபதி மிராரோட்டை சேர்ந்த ஒருவருக்கு தனது குடிசை வீட்டை ரூ.6 லட்சத்துக்கு விற்க முடிவு செய்தார்.

இதற்காக வீட்டை வாங்கியவரிடம் இருந்து பணத்தை ராம்மிலன் வாங்கி வைத்துக்கொண்டார். மனைவியிடம் கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மனைவி வீட்டை விற்க மறுத்துவிட்டார். பணம் கொடுத்த நபர் அந்த பணத்தை கேட்டு ராம்மிலனுக்கு தொல்லை கொடுத்து வந்தார். மேலும் குசும் பிரஜாபதியும் கணவரிடம் அந்த பணத்தை தரும்படி கேட்டு வந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே சண்டை உண்டானது. இதையடுத்து ராம்மிலன் தனது 4 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு குசும் பிரஜாபதியை பிரிந்து சென்றார். பின்னர் 3-வதாக திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில், தனியாக வசித்து வரும் குசும் பிரஜாபதியை கொலை செய்தால், அவர் வசித்து வரும் வீடு தனக்கு கிடைத்து விடும் என கருதிய ராம்மிலன், மனைவி குசும் பிரஜாபதியை தீர்த்துக்கட்ட மகன் மகேசுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டினார். தாயை கொல்ல மகேசும் சம்மதம் தெரிவித்தார்.

இதன்படி சம்பவத்தன்று தந்தை தரவேண்டிய ரூ.6 லட்சத்தை தருவதாக கூறி, மகேஷ் தனது தாய் குசும் பிரஜாபதியை நாலச்சோப்ரா ரெயில் நிலையம் அருகே வரும்படி அழைத்தார்.

இதை நம்பி அங்கு வந்த குசும் பிரஜாபதியை பெற்ற தாய் என்று கூட பாராமல் மகேஷ் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதற்கு அவரது உறவினர் மகேந்திரா என்பவர் உடந்தையாக செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ராம்மிலன், மகேஷ், மகேந்திரா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்