டி.என்.பாளையம்,
கோபி தாசில்தார் விஜயகுமார் மற்றும் வருவாய் அதிகாரிகள் நேற்று பங்களாப்புதூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 40 மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பங்களாப்புதூரை சேர்ந்த ஆனந்தன் என்பதும், பங்களாப்புதூர் அருகே பேட்டக்கரை பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் இருந்து மணலை அள்ளி, சரக்கு ஆட்டோவில் வைத்து கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள், 40 மணல் மூட்டைகளுடன் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதேபோல் ஈரோடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் சண்முகவள்ளி மற்றும் அதிகாரிகள் நேற்று அம்மாபேட்டை அருகே பூதப்பாடி வாய்க்கால் கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் செம்மண் இருந்ததும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செம்மண் கடத்தி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார், அந்தியூர் அருகே உள்ள நகலூரை சேர்ந்த லாரி டிரைவர் வேலுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.