பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஸ் நிலையத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று காலை அந்த சிலை தூக்கு கயிறு மாட்டி அவமதிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த கிராம மக்கள் மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து கிராம மக்கள் தங்களது சாலை மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர், அம்பேத்கர் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவினர். பின்னர் பாலாபிஷேகம் செய்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் இளவரசி, பெரியபாளையம் வருவாய் ஆய்வாளர் ஞானசவுந்தரி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.