மாவட்ட செய்திகள்

ராதாபுரம் ஊராட்சியில் சுடுகாட்டிற்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ராதாபுரம் ஊராட்சியில் சுடுகாட்டிற்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், அசேன்பூர் பெரிய ஏரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி ஏழுமலை (வயது 50) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இதனையடுத்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது நாட்டார் தெரு பகுதியில் உடலை எடுத்து சென்றபோது சிலர் தெருக்களில் பூ மற்றும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் அந்த தெருவை தாண்டி சுடுகாட்டிற்கு 1 கிலோ மீட்டர் தூரம் விளைநிலங்கள் வழியாக உடலை எடுத்து சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் வயல்வெளியில் உடலை எடுத்து செல்லக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இருப்பினும் ஏழுமலையின் உறவினர்கள் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

பின்னர் ஏழுமலையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரும்பி வரும்போது, சுடுகாடு வரை சாலை அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் ராதாபுரம் பஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், வருவாய் ஆய்வாளர் விஜயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராமன், ஊராட்சி செயலாளர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து சாலை வசதி ஏற்படுத்தி தருகிறோம் என உறுதியளித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்