திண்டுக்கல்:
பயிற்சி முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கான பயிற்சி முகாம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டாடுவோம் எனும் கையேட்டை வெளியிட்டார். அப்போது கலெக்டர் விசாகன் பேசியதாவது:-
குழந்தைகளின் எண்ணங்கள், செயல்பாடுகளை புரிந்து அவர்களை கையாள வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
குழந்தைகளின் கருத்துக்கு வாய்ப்பளிக்க மறுத்தால், பயந்த சுபாவத்துடன் குழந்தைகள் வளரும் அபாயம் உள்ளது. பள்ளி படிப்பை முடித்தும் குழந்தைக்கு எத்தகைய கல்வி சிறந்தது என்று பெற்றோர், குழந்தையிடம் ஆலோசிப்பது இல்லை. இதனால் விருப்பமின்றி படிக்கும் சூழல் ஏற்படுகிறது.
18 வயதுக்கு முன்பு திருமணம்
இதேபோல் பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறது. இதனால் திருமணத்துக்குள் பெண் குழந்தைகள் தள்ளப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் 16 சதவீத பெண்களுக்கு, 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அந்த வகையில் உலக அளவில் 40 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடக்கிறது. இது குழந்தை உரிமை மீறல் ஆகும்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமானது. பெற்றோர் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இளவயது திருமணம், உறவுமுறை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
உயரம் குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மீது பெற்றோர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.