மாவட்ட செய்திகள்

தஞ்சையில், தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது

துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி தஞ்சையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நேற்று அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள் எல்லாம் வழக்கம்போல் ஓடின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப்படவில்லை. தஞ்சை காந்திஜிசாலை, அண்ணாசாலை, பழைய பஸ் நிலையம், தெற்குஅலங்கம், தெற்குவீதியில் ஓரிரு கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப் பட்டன.

அண்ணாசாலை, காந்திஜிசாலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலை ஆகியவற்றில் உள்ள கடைகளை அடைக்கும் படி சிலர் கடை உரிமையாளர்களிடம் வலிறுத்தினர். இதனால் இந்த சாலைகளில் திறக்கப்பட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கடைக்கு வேலைக்கு வந்த ஊழியர்கள் அனைவரும் கடை வாசலில் காத்திருந்தனர். மதியம் 12.30 மணிக்கு மேல் மீண்டும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதனால் கடையடைப்பு போராட்டமும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்தநிலையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மத்தியமந்திரியுமான டி.ஆர்.பாலு, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் து.செல்வம், மாநகர செயலாளர் நீலமேகம், முன்னாள் நகரசபை தலைவர் இறைவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் பழனியப்பன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த சாலை மறியலால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியவில்லை. இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேலு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், ஜெயசீலன் மற்றும் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக முன்னாள் மத்தியமந்திரி டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறும்போது, பல ஆண்டுகளாக நச்சுக்கழிவை வெளியேற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தியும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கலெக்டரையும், போலீஸ் சூப்பிரண்டையும் மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படி கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை போதாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டி.ஜி.பி.ராஜேந்திரனும் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு