ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனியை சேர்ந்தவர் தமிழ்ராஜ் (வயது 46). இவரும், இவரது மனைவியும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் தங்கள் வீட்டின் பின்பகுதியில் கோழிக்கூண்டு அமைத்து சுமார் 20 கோழிகளை வளர்த்து வருகிறார்கள்.
நேற்று காலை தமிழ்ராஜின் மனைவி கோழிக்கூண்டை திறக்க சென்றார். கூண்டை திறந்தவுடன் கோழிகள் சத்தம் போட்ட நிலையில் வெளியே ஓடின. உள்ளே பார்த்த போது ஒரு கோழி இறந்து கிடப்பதை கண்டார்.
மேலும் அங்கு ஒரு பெரிய மலைப்பாம்பு சுருண்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த மலைப்பாம்பு ஏற்கனவே 2 கோழிகளை கொன்று விழுங்கிய நிலையில் கிடந்தது. உடனே, அவர் பதறியடித்தபடி தனது கணவர் தமிழ்ராஜிடம் கூறினார். 3-வது கோழியை கொன்ற மலைப்பாம்பு விழுங்க முடியாமல் திணறியது.
இதனையடுத்து நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இருந்து வன ஊழியர் துரைராஜ் மற்றும் சிலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் கோழிக்கூண்டுக்குள் மலைப்பாம்பு புகுந்த தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு கூடினர். இதற்கிடையே மலைப்பாம்பு நகர முடியாமல் திக்குமுக்காடியதால் விழுங்கிய 2 கோழிகளையும் வெளியே கக்கியது.
உடனே வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கோழிக்கூண்டிற்குள் இருந்த மலைப்பாம்பை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். அந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்தது. தொடர்ந்து, அதை வனத்துறையினர் சாக்கு மூடைக்குள் அடைத்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.