விழுப்புரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 46). இவருக்கு சொந்தமாக திண்டிவனம் தாலுகா மண்ட பெரும்பாக்கம் கிராமத்தில் 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு சிட்டா அடங்கல் கேட்டு கடந்த 2009-ம் ஆண்டு அவர் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது அங்கு பதிவறை எழுத்தராக இருந்த ராமானுஜம் (55) என்பவர், சிட்டா அடங்கல் வழங்க வேண்டுமெனில் ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என்று ராஜகோபாலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அப்படியானால் ரூ.500 கொடுக்கும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே சிட்டா அடங்கல் வழங்க முடியும் என்று ராமானுஜம் கறாராக கூறினார். இதுபற்றி ராஜகோபால் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி 6.10.2009 அன்று ரசாயன பொடி தடவிய 500 ரூபாயை ராஜகோபால் எடுத்துக்கொண்டு திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று பதிவறை எழுத்தர் ராமானுஜத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் ராமானுஜத்தை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. பின்னர் இவ்வழக்கு ஊழல் வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ராமானுஜம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் இவ்வழக்கில் நேற்று நீதிபதி மோகன் தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ராமானுஜத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி மோகன் தீர்ப்பில் கூறி உள்ளார்.