மாவட்ட செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி செங்கம் கோர்ட்டில் சரண்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

செங்கம்,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பிரபல லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையை கடந்த 2-ந் தேதி இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் காலை கடையை ஊழியர்கள் திறந்து பார்த்தபோது வைரநகைகள், கண்ணாடி ரேக்குகளில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் இல்லை. அங்கு ஓர் இடத்தில் ஒரு நபர் மட்டுமே உள்ளே செல்லும் அளவுக்கு சுவரில் துளையிடப்பட்டு இருந்தது.

இந்த துளை வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்து கடையில் இருந்த 30 கிலோ தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையை முடுக்கினர்.

இந்த நிலையில் திருவாரூர் போலீசார் விளமல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ தங்கநகைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32), என்பதும் தப்பிச்சென்றது திருவாரூர் சீராப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (28) என்பதும் தெரியவந்தது. இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேஷ், அவரின் மாமாவான முருகன் உள்பட தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுரேஷ் திருவண்ணாமலை கோர்ட்டில் சரண் அடைய உள்ளதாக நேற்று காலை தகவல் பரவியது. செய்தியாளர்கள் திருவண்ணாமலை கோர்ட்டுக்கு செய்தி எடுக்க சென்றனர். சுரேசை பிடிக்க போலீசாரும் சென்றனர். ஆனால் காலை 10 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு விக்னேஷ்பிரபு முன்னிலையில் சுரேஷ் சரண் அடைந்தார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் முடிவு செய்துள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது