திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூரில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள 30 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் மின்வாரிய ஊழியர்கள் கழிவுபொருட்களை கொட்டி வந்தனர். இந்தநிலையில், நேற்று மின்வாரிய அலுவலகத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுற்றி திரிந்தார். திடீரென அந்த நபர் பாழடைந்த கிணற்றில் குதித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டதும் அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக கடம்பத்தூர் போலீசாருக்கும், பேரம்பாக்கம் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி அவரை மீட்டு மேலே கொண்டு வரும்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.