மாவட்ட செய்திகள்

கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது

களியக்காவிளை அருகே கோவிலில் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியான மீனச்சலில் மிகவும் பழமையான கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை மூலிகைகளால் ஆனது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்பு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில், பூசாரி கோவிலுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்ற போது, கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. கருவறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மூலிகையால் செய்யப்பட்ட கிருஷ்ணசாமி சிலை கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. மேலும், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது.

இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையையும், உண்டியலையும் அலேக்காக தூக்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது