அணைக்கட்டு,
அணைக்கட்டு தாலுகா வேலங்காடு கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காளைவிடும் விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஆந்திரா, வாணியம்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 185 காளைகள் கொண்டுவரப்பட்டன. காளைவிடும் விழாவை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் அங்குள்ள கோவில் மீதும், வீட்டு மாடிகள் மீதும் அமர்ந்து சீறிப்பாய்ந்து ஓடும் காளைகளை ரசித்தனர்.
காளைகளை பள்ளிகொண்டா கால்நடை மருத்துவர் பாண்டியன் பரிசோதனை செய்தார். இதனை தொடர்ந்து காளைவிடும் விழாவை தாசில்தார் முரளிகுமார், தனிதாசில்தார் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். அதைத்தொடர்ந்து காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து ஓடின.
காளை ஓடும் தெருவின் இருபுறமும் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் காளைஓடும் பாதையில் நின்றுகொண்டு கைகளால் காளைகளை தட்டி உற்சாகப் படுத்தினர். அப்போது சில காளைகள் பார்வையாளர்கள் பக்கமாக ஓடின. இதனால் அங்கிருந்த வாலிபர்கள் சிதறி ஓடினார்கள்.
அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியது. இதில் 15 பேர் காயமடைந்தனர். இவர்களின் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு காளைவிடும் விழாவில் முகாமிட்டிருந்த மருத்துவ அலுவலர் கைலாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 2 பவுன் உள்பட 42 பரிசுகள் வழங்கப்பட்டன. வருவாய் ஆய்வாளர் முகமதுசாதிக், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கீதா, ரேவதி மற்றும் காளைவிடும் நிர்வாககுழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை வேலங்காடு கங்காதரன், நாட்டாண்மை பொற்கொடியான் மற்றும் வாலிபர் குழுவினர் செய்திருந்தனர்.