ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொளவேடு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 32). கூலி தொழிலாளி. இவரின் மனைவி இந்துமதி (20). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.
சங்கர் நேற்று முன்தினம் தனது வீட்டில் பிணமாக இறந்து கிடந்தார். அவரது வாயில் ரத்தம் வடிந்து இருந்தது. இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கள்ளத்தொடர்பு
சம்பவம் நடந்த இரவில் இந்துமதி வீட்டில் தூங்காமல் மாமியார் வீட்டில் தூங்க சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
இந்துமதி அதே பகுதியை சேர்ந்த அஜித்துடன் (20) கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன் தன் மனைவி, அஜித்துடன் வீட்டில் உல்லாசமாக இருப்பதை சங்கர் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியையும், அஜித்தையும் அடித்து உதைத்தார்.
மதுவில் விஷம்
கடந்த 20ந் தேதி இது தொடர்பாக சங்கருக்கும், இந்துமதிக்கும் தகராறு நடந்தது. இதனால் இந்துமதி வீட்டிலிருந்து வெளியே சென்று அஜித்தை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறினார். சங்கருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து தீர்த்து கட்ட இருவரும் முடிவு செய்தனர்.
அதன்படி அஜித் குளிர்பானம், மது பாட்டில்கள், விஷம் வாங்கி வந்து இந்துமதியிடம் கொடுத்தார். இந்துமதி மதுபாட்டிலில் விஷத்தை கலந்து தன் கணவரிடம் கொடுத்தார். இனி அஜித்துடன் தொடர்பு வைத்து கொள்ளமாட்டேன் என்று நடித்தார்.
கைது
இதை நம்பிய சங்கர், இந்துமதி கொடுத்த விஷம் கலந்த மதுவை குடித்தார். சற்று நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் இந்துமதி அருகே உள்ள தன் மாமியார் வீட்டில் போய் படுத்து தூங்கினார் என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்துமதி, அஜித் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.