ஆண்டிப்பட்டி,
தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி முருகன் கலந்து கொண்டு புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். முன்னதாக மருத்துவமனை கூட்ட அரங்கில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசாருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐ.ஜி முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்போது அமைதியாக காணப்படும் தேனி மாவட்டம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாதி கலவரம் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்ற பகுதியாக இருந்தது. குற்றங்கள் அதிகரித்த காரணத்தினாலேயே மதுரை மாவட்டத்தில் இருந்த தேனியை பிரித்து தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையால் தேனி மாவட்டம் அமைதியான மாவட்டமாக மாறியது.
அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு தேனி மாவட்டத்தில் உச்சத்தில் இருந்தது. டாக்டர்கள் மற்றும் போலீசார் மேற்கொண்ட சீரிய முயற்சியால் தற்போது கொரோனா வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் இன்னும் ஒத்துழைத்தால் கொரோனா இல்லாத மாவட்டமாக தேனி மாறும். தற்போது தொடங்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தால் பொதுமக்கள், டாக்டர்கள் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்தேஜஸ்வி, மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன், ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சரவண தேவேந்திரன் மற்றும் போலீசார், டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 5 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.