மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் ஒரே நாள் இரவில் கைவரிசை 13 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவள்ளூரில் ஒரே நாள் இரவில் 13 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், பொருட்களை திருடி கைவரிசை காட்டி உள்ளனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையான ஜெ.என்.சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே திருவள்ளூரை சேர்ந்த காளிராஜன் (வயது 32) என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நள்ளிரவில் கடையின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் அவரது கடையின் அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்த அசோக்குமார் (52) என்பவரின் குளிர்பான கடையின் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.5,500 மற்றும் குளிர்பான பாட்டில்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, திருவள்ளூரை சேர்ந்த சிவக்குமார் (50) என்பவரின் இனிப்பு கடையின் கதவை உடைத்துள்ளனர். ஆனால் முழுமையாக உடைத்து உள்ளே செல்ல முடியாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இதேபோல் வி.எம்.நகரில் மளிகை கடை, டீக்கடை மற்றும் எம்.ஜி.ஆர். நகரில் மூன்று கடைகளிலும், என்.ஜி.ஓ. காலனியில் 5 கடைகளிலும், விவேகானந்தர் தெருவில் ஒரு கடை உள்பட ஒரே நாள் இரவில் 13 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடைகளில் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள மர்ம நபர்களின் உருவங்களை வைத்து போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள 13 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது