மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஊரடங்கை மீறி சாலைகளில் தேவையில்லாமல் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ சுற்றித்திரிபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்யும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர், விழுப்புரம் நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் நேரில் சென்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ரோந்து வந்து சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி வருபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து அனுப்பி வருகிறார்.

அதுமட்டுமின்றி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள மார்க்கெட் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் நின்றுகொண்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், ஒருமுறை வீட்டை விட்டு வெளியே கடைகளுக்கு வந்தால் 4, 5 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கிச்செல்லும்படியும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதாக பொய் சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிய வேண்டாம் என்றும் ஒலி பெருக்கி மூலம் அவ்வப்போது அறிவுரை கூறி வருகின்றனர். இருப்பினும் இதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர்.

அவ்வாறு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 27 நாட்களில் 4,853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 4,943 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான இவர்களிடம் இருந்து 50 கார்கள், 70 ஆட்டோக்கள், 3,634 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 3,754 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்றும் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்