மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக ஊத்துக்கோட்டை நேரு பஜாரை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 50), அவருடைய மனைவி நீலாவதி(46) மற்றும் ராமச்சந்திரனின் அக்காள் அலமேலு(56) ஆகிய 3 பேர் வந்தனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்த அவர்கள், திடீரென பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தங்கள் உடலில் ஊற்றிக்கொண்டு 3 பேரும் தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 3 பேரையும் தடுத்தனர்.

ஆனாலும் அவர்கள் கதறி அழுதபடி தீக்குளிக்க முயன்றனர். அதற்குள் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஓடிவந்து, 3 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அப்போது ராமச்சந்திரன், தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கூறி தரையில் புரண்டு கதறி அழுதார்.
இதுபற்றி அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது.


நாங்கள் குடும்ப செலவுக்காக ஊத்துக்கோட்டை ஸ்ரீராம்குப்பம் பகுதியை சேர்ந்த நரசிம்மலுநாயுடு என்பவரிடம் வீடு மற்றும் காலி இடத்தின் பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் கடன் பெற்றோம். வாங்கிய கடன் முழுவதையும் நாங்கள் செலுத்திய பிறகும் அவர், இன்னும் பாக்கி உள்ளதாக கூறுவதுடன், எங்கள் பத்திரங்களையும் திரும்ப தர மறுக்கிறார்.

பாக்கி பணம் தந்தால்தான் பத்திரங்களை தருவதாக கூறுவதுடன், தொடர்ந்து பத்திரங்களை கேட்டு வந்த எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, வீட்டையும் காலி செய்யும்படி கூறுகிறார். இதுபற்றி ஊத்துக்கோட்டை போலீசில் அவர் மீது புகார் செய்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே வாங்கிய கடனை முழுமையாக செலுத்திய பிறகும் எங்கள் பத்திரங்களை தர மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பத்திரங்களை வாங்கி தரவேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம். அந்த மனஉளைச்சலில் நாங்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் 3 பேரையும் போலீசார் விசாரணைக்காக திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருத்தணி அருகே உள்ள வீரகாவேரிராஜபுரம் பகுதியை சேர்ந்த அம்பிகா(31) என்பவர் தனது குழந்தைகள் நந்தினி(8), விஷ்ணு(7), பேபிஸ்ரீ(5) மற்றும் அக்காள் பரமேஸ்வரி(35) ஆகியோருடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார். அவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரது பையில் பூச்சி மருந்து(விஷம்) பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதுபற்றி அவரிடம் போலீசார் விசாரித்தனர். அம்பிகாவின் கணவர் பொன்னுரங்கம் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக உள்ளார். இதனால் அவரது குடும்பம் வருமானம் இல்லாமல் தவிக்கிறது. இதற்கிடையில் அங்கன்வாடி பணியாளர் இடத்துக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்விலும் அவர் கலந்து கொண்டார். ஆனால் அனைத்து தகுதியும் இருந்தும் அந்த வேலை அவருக்கு கிடைக்காமல் வேறு ஒருவருக்கு கிடைத்து விட்டதாக தெரிகிறது. இதனால் தனக்கு அங்கன்வாடி பணியாளர் வேலை வழங்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் தனது குழந்தைகள் மற்றும் அக்காளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் வந்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.

அவரை சமாதானம் செய்த போலீசார், மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அழைத்து சென்றனர். அவரிடம் இது தொடர்பான கோரிக்கை மனுவை அம்பிகா அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்