ஈரோடு,
ஈரோடு மாநகரம் ஈஸ்வரன் கோவில் வீதியை அடுத்து என்.எம்.எஸ். காம்பவுண்ட் காந்தி மார்க்கெட் பகுதி உள்ளது. இங்கு பரணி டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. படுக்கை விரிப்பு, ஜன்னல் திரை உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் உற்பத்தி மற்றும் மொத்த விலை விற்பனை நிலையமாக இது செயல்பட்டு வருகிறது. பரணி டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமு என்ற ராமதுரை (வயது46), அதே கட்டிடத்தின் மேல் பகுதியில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வருமான வரி சோதனை
இந்தநிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் வருமானவரித்துறை அதிகாரிகள் பரணி டெக்ஸ் நிறுவனத்துக்கு வந்தனர். 3 கார்களில் வந்த 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நிறுவனத்துக்குள் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான குடோன்களிலும் நடந்தது. உரிமையாளர் ராமதுரையின் வீடு அதே கட்டிடத்தில் இருப்பதால் அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை காரணமாக நிறுவனத்தின் கதவுகள் மூடப்பட்டன. வெளியே இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நேற்று மாலை வரை தொடர்ந்து சோதனை நடந்தது. 2018-2019 ம் ஆண்டில் இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் சோதனை நடந்ததாக தெரிகிறது. ஆனால் இதுபற்றிய முழு விவரங்களும் சோதனை முடிந்த பின்னரே தெரியவரும்.
ஜவுளி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய திடீர் சோதனை ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.