மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்து வந்த மழையின் அளவு குறைந்தது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்தநிலையில் தற்போது கர்நாடகத்தில் மீண்டும் மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப் படும் தண்ணீர் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 281 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணிக்கு 14 ஆயிரத்து 784 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அணை நீர்மட்டம் 81.69 அடியாக இருந்தது. நேற்று காலை அணை நீர்மட்டம் 82.83 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து உள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.