மாவட்ட செய்திகள்

கோவிலில் மயங்கி விழுந்ததில் மூளைச்சாவு: கிராம நிர்வாக அதிகாரி மனைவியின் உடல் உறுப்புகள் தானம்

கும்பகோணம் அருகே கோவிலில் மயங்கி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி மனைவியின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் வரதராஜன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவருடைய மனைவி வள்ளி (வயது56). இவர்களுக்கு துர்காதேவி, பொற்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

கடந்த 4-ந்தேதி வள்ளி கும்பகோணம் பெரியதம்பி நகரில் உள்ள ஒரு கோவிலில் உழவார பணிகளை மேற்கொண்டார். அப்போது மயங்கி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுயநினைவு இழந்த நிலையில் இருந்த வள்ளிக்கு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து வள்ளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன் பேரில் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் வள்ளியின் 2 கண்கள், 2 சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

பின்னர் கண்களை திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. 1 சிறுநீரகம் மீனாட்சி மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

வள்ளியின் உடல்உறுப்புகளை தானம் செய்த அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். இதே போல் அனைவரும் உடல்உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிர்களை காக்க வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். அப்போது தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் சங்க பொருளாளர் முத்துக்குமார், செயலாளர் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்