மதுரை,
அரசு போக்குவரத்து துறையில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கருத்த துரை என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
போக்குவரத்து துறையில் இளநிலை உதவியாளராக கடந்த 1992-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். 2006-ம் ஆண்டில் உதவியாளராக பதவி உயர்வு பெற்றேன். தமிழ்நாடு அமைச்சு பணியாளர்கள் சிறப்பு விதி மற்றும் அரசு உத்தரவின்படி போக்குவரத்து துறையில் உதவியாளராக பணிபுரிபவர்கள் ஏதாவது ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு ஆண்டு கணக்காளராக பணிபுரிந்திருந்தால் அவர் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற தகுதி உள்ளது.
இதற்கிடையே அரசிடம் அனுமதி பெறாமல் நான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மேல் அதிகரிகளுக்கு மொட்டைக்கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தின் அடிப்படையில் என் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதை காரணம் காட்டி நான் ஓய்வு பெறும் வரை எனக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கவில்லை. என் மீதான துறை ரீதியான விசாரணையை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மீது கடந்த 2010-ம் ஆண்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதுவரை விசாரணை முடியவில்லை. அரசிடம் அனுமதி பெற்றுத்தான் சொத்து வாங்கப்பட்டுள்ளது என வாதாடினார்.
பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் மனுதாரர் பணிக்காலத்தின்போது ஊதியத்துடன் தொடர்பில்லாத வருமானத்தின் மூலம் தான் சொத்து வாங்கினார் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. விசாரணையில் தாமதம் ஏற்படவில்லை.
மனுதாரர் தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகளை தாக்கல் செய்வதை பொழுதுபோக் காக கொண்டுள்ளார் என வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் தனது மனைவி பெயரில் வீடு வாங்கியதற்கு அரசிடம் முன் அனுமதி பெற்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் அரசு சார்பில் அவ்வாறு அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. வீடு கட்டிய பிறகே அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர். அப்போது வீடு கட்டுவதற்கு முன்பே அரசிடம் அனுமதி பெற வேண்டும் என மனுதாரர் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
மனுதாரர் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையிலான நடவடிக்கை தாமதம் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை முடிவடையாமல் உள்ளது. எனவே அவர் மீதான விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும். விசாரணை முடிவு அடிப்படையில் மனுதாரருக்கு பதவி உயர்வு மற்றும் பலன்கள் வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.